மத்தள சர்வதேச விமான நிலையம் 260 மில்லியன் டொலர் கடனைக் கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை மதிப்பில் 7 ஆயிரத்து 814 கோடியே 56 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாவாகும்.. எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை இந்தக் கடனை செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இதனைத் தெரிவித்த அமைச்சர்,
வர்த்தக திட்டமிடலொன்று இன்றியே மத்தள விமான நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரிய கடன் ஏற்பட்டுள்ளது.
சுமார் 260 மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது.
எனவே மத்தள விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் ஓரிரு ஆண்டுகளில் எம்மால் அந்த இலக்கை அடைய முடியாது. இந்த விமான நிலையத்தால் கடன் மாத்திரமின்றி பாரிய செலவும் காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் அதன் செயற்பாடுகளை முற்றாக நிறுத்த முடியாது. காரணம் நாட்டில் மாற்று விமான நிலையமொன்று அத்தியாவசியமானதாகும்.
விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிறந்த முதலீட்டாளர்களை வரவழைக்க வேண்டியுள்ளது.
எம்மால் அதனை செய்ய முடியாது. எவ்வாறிருப்பினும் விமானங்கள் பழுது பார்த்தல், அவற்றை புதுப்பித்தல் போன்ற செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம் என்றார்.